கட்டுரைச் சுருக்கம்

இஸ்லாமிய விழுமியம் மற்றும் ஷரீஆவின் இலக்குகளை முன்னிறுத்தியே நவீன இஸ்லாமிய அரசியல் சிந்தனை குறித்து சிந்திக்கப்பட வேண்டும். ஏனெனில், சமகால அரசியல் கோட்பாடுகளான பல கட்சி முறைமை, நல்லாட்சி, வலுவேறாக்கம் மற்றும் யாப்புவாதம் போன்றவற்றை இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் அணுகும் போது, வரலாற்று நிகழ்வூகள், தனித்தனியான பிரத்தியேக அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸூன்னா சட்டவசனங்களை (Specific verses) பயன்படுத்தி ஒப்பீடு செய்யும் வழிமுறைகளே பயன்படுத்தப்பட்டுள்ளதனை அவதானிக்க முடியும்.

விளைவாக, ஒவ்வொரு காலத்திலும் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் ஒழுங்குகளுக்குல் எமது அரசியல் கலந்துரையாடல்கள் சரணடைந்து விடுகின்றன. ஆனால், இஸ்லாமிய விழுமியங்கள் மற்றும் நோக்கங்களின் ஒளியில் நவீன இஸ்லாமிய அரசியல் சிந்திப்புக்கள் அமையப் பெறும் பட்சத்தில், சமகால அரசியல் கோட்பாடுகளின் கோளாறுகளை அடையாளப்படுத்தவும், அதனை அபிவிருத்தி செய்யவும் முன்மாதிரி அரசியல் கலாச்சாரமொன்றை கட்டியெழுப்புவதற்கான புதிய முறைவழிகளை கண்டறிவதற்கும் ஏதுவாக அமையும்.

இப்பின்புலத்தில் ஏகாதிபத்திய உலகம், ஆட்சியாளரின் நலனை மையப்படுத்திய தேசிய அரசுகள் முறைமை மற்றும் அரசியல் ரீதியாக பலவீனப்பட்டுப் போன சிவில் சமூகங்கள் என்ற மும்முனை சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கு “சிவில் தேசம் கோட்பாடு” சிறந்ததோர் அரசியல் சிந்தனையாகும். இச்சிந்தனை இஸ்லாமிய ஷரீஆவின் இலக்குகளுடன் முழுயான உடன்படுவதுடன், நவீன கால அரசியல் கலந்துரையாடல்களில் பங்குகொள்ளும் சகல சிந்தனை முகாம்களையும் உள்ளீர்க்கக் கூடிய வலிமையை அது கொண்டுள்ளது. அதேபோல் சகல தரப்பினரும் இணைந்து இஸ்லாமிய ஷரீஆவின் அரசியல் இலக்குகளை எய்துவதற்கான பொதுத் தளத்தையும் அக்கோட்பாடு ஏற்படுத்திக் கொடுக்கின்றன. முஸ்லிம் பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை என்ற வித்தியாசமின்றி, அனைத்து நிலங்களிலும் இதனை செயற்படுத்த முடியும். சமகால அரசியல் சூழமைகளை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி விடக்கூடிய சாதகமான பல கூறுகள் “சிவில் தேசம்”  கோட்பாடிற்குல் புதைந்துள்ளன.

அறிமுகம்

இஸ்லாமிய அரசியல் சிந்தனையினுடைய வரலாற்றோட்டத்தில் “அரபுவசந்தம்” ஓர் திருப்பமாகும். பல நூற்றாண்டாக போதிய கரிசனை செலுத்தப்படாதிருந்த இத்துறை, அதன் பின்புதான் இஸ்லாமிய அறிஞர்களது ஒட்டு மொத்த கவனத்தை ஈர்த்தன. ஏகாதிபத்திய உலக ஒழுங்கிற்கும், நவீன தேசிய அரசு முறைமைக்கும் மத்தியில் இஸ்லாத்தின் அரசியல் இலக்குகளை எவ்வாறு அடைவது? என்ற வினாவிற்கான விடையை சகல இஸ்லாமிய அரசியல் துறைசார் புத்திஜீவிகளும் தேடத் துவங்கினர். இப்புதிய ஆய்வுகளின் தாக்கம் அரபுலகம் என்ற வட்டத்தையும் தாண்டிச் சென்று, முஸ்லிம்களின் அரசியல் பங்கேற்பு நிகழும் சகல நாடுகளிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.

ஆனால், 2013 ஆண்டு இடம் பெற்ற “எகிப்திய இராணுவப் புரட்சி” சர்வதேச இஸ்லாமிய இயக்கங்களின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குட்படுத்தியது. அது ஏற்படுத்திய எதிர்மறைத் தாக்கத்தையும் சர்வதேச இஸ்லாமிய இயக்கங்களினால் அனுபவிக்க வேண்டியேற்பட்டமை துரதிஷ்டவசமானதாகும். என்றாலும், எகிப்திய இராணுவப் புரட்சியின் பின்னரான கடந்த மூன்று வருட காலப்பிரிவில் அரசியல் கலந்துரையாடல்கள் பல மடங்கு ஆழ அகலமாக அலசப்பட்டன. இன்னும், அரசியல் செயற்பாட்டு பற்றிய இஸ்லாமிய இயக்கங்களினதும், கட்சிகளினதும் புரிதல்களும் மீள்வாசிப்புச் செய்யப்பட்டமை நோக்கத்தக்கதாகும்.

 

குறித்த கலந்துரையாடலிற்கு பங்களிப்புச் செய்யும் முகமாக “சிவில் தேசம் – இஸ்லாமிய ஷரீஆவின் இலக்குகளின் நிழலான ஒரு புரிதல்” என்ற புத்தகத்தை கலாநிதி ஜாஸிர் அவ்தா வெளியிட்டுள்ளார். இவர் ஓர் அரசியல் துறை விற்பன்னர் அல்லர். ஆனால் இஸ்லாமிய ஷரீஆவின் இலக்குகள் மற்றும் அதன் பிரயோகம் பற்றிய ஆய்வு அனுபவத்தைக் கொண்டவர். எனவே இஸ்லாமிய ஷரீஆவின் பரந்துபட்ட இலக்குகள் பற்றிய கோட்பாட்டை பயன்படுத்தி எவ்வாறு சமகால அரசியல் நெருக்கடிகளை அணுகுவது? மற்றும் சிறந்ததொரு அரசியல் கலாச்சாரத்தை கட்டியெழுப்ப இக்கோட்பாட்டுத் தளத்தை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது? என்பது தொடர்பாக தனது புத்தகத்தில் கலாநிதி ஜாஸிர் அவ்தா அலசுகிறார். இப்புத்தகம் நான்கு பிரதான கருப்பொருள்களை ஆய்வுக்குட்படுத்துகிறது.

அந்த வகையில் முதலாவதாக, இஸ்லாமிய உலகின் அரசியல்சார் மையப்பிரச்சினை என்ன? என்ற அம்சத்தை புத்தகத்தின் முன்னுரை விரிவாகப் பேசுகிறது. அடுத்து சிவில் தேசம் என்ற எண்ணக் கருவை எவ்வாறு புரிந்து கொள்ளலாம்? மற்றும் அதனை இஸ்லாமிய ஷரீஆவின் இலக்குகளின் நிழலில் சிறந்த அரசியல் கலாச்சாரமொன்றை கட்டியெழுப்புவதற்கான அடிப்படையாக எவ்வாறு மாற்றியமைக்கலாம்? என்பதனை அதன் முதலாம் தலைப்பு அலசுகிறது.

இரண்டாவது பகுதி சிவில் தேசம் என்ற கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்ட தேசமொன்றின் “இஸ்லாமிய மூலத்தை” எவ்வாறு வரையறை செய்ய முடியும்? என்ற கேள்விக்கான விடையை ஆழமாக விவாதிக்கிறது. அல்குர்ஆன், அஸ்ஸூன்னா மற்றும் இஸ்லாமிய வரலாறு பற்றிய முஸ்லிம் பெரும்பான்மை சிவில் தேசமொன்றின் நிலைப்பாடு எவ்வாறு அமைய முடியும்? என்ற விவகாரத்தையும் அப்பகுதி விரிவாகப் பேசுகின்றன.

இன்னும், சமகால அரசியல் கோட்பாடுகளாக ஜனநாயகம், கம்யூனியஸம், நல்லாட்சி மற்றும் வலுவேறாக்கம் போன்ற பன்மைத்துவ அரசியல் கலாச்சாரத்தை வலுவூட்டும் கருத்தியில்களை இஸ்லாமிய ஷரீஆவின் இலக்குகளின் நிழலில் புரிந்து கொள்வது பற்றிய அவதானங்களை புத்தகத்தின் மூன்றாம் பகுதி முன்வைக்கிறது. இக்கட்டுரை இப்புத்தகம் கலந்துரையாடும் பிரதான கருத்துக்களை தொகுத்தளிக்கிறது.

 

இஸ்லாமிய உலகின் மையப் பிரச்சினைகள் யாவை?

 

இஸ்லாம் நிலைநாட்டப்பட்டு விட்டன” அல்லது “இஸ்லாமிய ஆட்சி வந்து விட்டது என்ற மனோ நிலையிலேயே அரபு வசந்தம் எற்படுத்திய மாற்றங்களை பலரும் நோக்கினர். ஆனால் தமது கற்பனைகள் பலவீனமானவை என்பதனையும், ஒரு போதும் சில தலைவர்களை மாற்றுவதால் அரபுலக அரசியல் கலாச்சாரத்தில் மாற்றம் நிகழப் போவதில்லை என்ற யதார்த்தத்தையும் பின்பு அவர்கள் புரிந்து கொண்டனர். இத்தகைய பிழையான மதிப்பீடுகள் ஏற்படுவதற்கான பிரதான நியாயம் என்னவென்றால்,அரபுலகின் மையப் பிரச்சினை பற்றிய ஆழமான புரிதல் இல்லாமல் இருப்பதாகும்.

அரபுலக அரசியல் கலாச்சாரத்தினுடைய மையப்பிரச்சினைகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

முதலாவது சர்வாதிகாரம், அர்த்தமற்ற தீவிர தேசியவாதம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் நேரடி தலையீடுகள் எனபவற்றால் “சிதைவுற்ற அரசுகள்” எனலாம்.

இரண்டாவது, அறியாமை, வறுமை மற்றும் சமூக நோய்களால் பாதிக்கப்பட்ட “பலவீனமான மனிதர்கள்” ஆகும்.

இது அரசு மற்றும் தனி மனிதன் என்ற இரு மட்டங்களிலும் விழுமியங்கள் மற்றும் பண்பாடுகள் புறக்கணிக்கப்பட்டதனால் ஏற்பட்டதாகும். எனவே, இத்தகைய இரு பிரச்சினைகளுக்கும் எமது போராட்டம் தீர்வை முன்வைக்காத நிலையில் புரட்சிகரமான மாற்றமொன்றை அரபுலகம் கனவு காண்பது கடிமானதாகும் என கலாநிதி ஜாஸிர் அவ்தா தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார். பல வருடமாக மக்களைச் சூறையாடிய “தலைமைகளுக்கு” எதிரான போராட்டமாகவே அரபு வசந்தம் காட்சிப்படுத்தப்பட்டது. ஆனால் சிதைவுற்ற அரசுக் கட்டமைப்புகள் மற்றும் பலவீனமான மனிதன் போன்ற மையப்பிரச்சினைகள் அதன் இலக்குகளாக அமையவில்லை. விளைவாக 2011 முன்னர் இருந்தனை விட மிக மோசமான நிலையை நோக்கி இன்றைய அரபுலகம் தள்ளப்பட்டிருக்கிறது. எனவே இன்று தேவை நல்ல விழுமியங்கள், அரசியல் இலக்குகள் மற்றும் ஒழுக்கக் கோட்பாடுகளை மையப்படுத்திய சகல தளங்களிலுமான “பண்பாட்டுப் புரட்சி”  ஆகும் என்கிறார் கலாநிதி அவ்தா.

இந்தப் பின்புலத்தில் “பண்பாட்டுப் புரட்சியை” தனிமனிதன் மற்றும் அரசியல் தளத்தில் நிகழ்த்துவதற்கு “இஸ்லாமிய ஷரீஆவின் இலக்குகள்” அல்லது “மகாஸிது ஷரீஆ”வே மிகப் பொருத்தமான தளம் என அவர் கருதுகிறார். அதற்கான மூன்று பிரதான நியாயங்களையும் புத்தகத்தின் முன்னுரையில் கலாநிதி ஜாஸிர் அவ்தா முன்வைக்கிறார்.

முதலாவதாக மகாஸிது ஷரீஆ என்பதனை “நலன்களின் தொகுப்பு” என்றே பல நூற்றுhண்டாக பொருள் கொடுக்கப்பட்டது. இதனை முழுமைத்தன்மை கொண்ட விளக்கமாக கருத முடியாது. உண்மையில் தனிமனிதன், சமூகம், நாடு மற்றும் மனித சமூகம் என்ற பல்வேறு தளங்களையூம் வழிநடாத்தக் கூடிய “பண்பாடுகளது தொகுப்பு” என்றே மகாஸிது ஷரீஆ விளக்கப்பட வேண்டும். இந்த வகையில் “சிதைக்கப்பட்ட அரசுகள்” மற்றும் “பலவீனமான தனிமனிதன்” என்ற சமகால முஸ்லிம் உலகம் எதிர்கொள்ளும் இரு வேறுபட்ட பண்பாட்டுப் பிரச்சினைகளுக்கு மகாஸிது ஷரீஆவால் தீர்வை முன்வைக்க முடியும்.

இரண்டாவது இன்றைய உலகம் எதிர்கொள்ளும் பண்பாட்டுப் பிரச்சினை முஸ்லிம்களை மாத்திரம் பாதித்து விட்டதொன்றல்ல. ஒட்டுமொத்த மனித சமூகத்தையும் எதோவோர் கோணத்தில் அது தாக்கியுள்ளதனை அவதானிக்க முடியும். இந்த வகையில் முழு மனித சமூகத்தையும் “பண்பாட்டுப் பிரச்சினையிலிருந்து” பாதுகாக்கும் பாரிய சர்வதேச வேலைத்திட்டத்திற்கு பங்களிப்புச் செய்யும் கடப்பாடு முஸ்லிம் சமூகத்திற்கு உண்டு. எனவே அப்பணியை சகல இன, மத மற்றும் கோட்பாட்டுப் பின்புலங்களைக் கொண்ட மனிதர்களுடன் இணைந்து முஸ்லிம் உம்மா நிறைவேற்ற வேண்டும். இங்கும் “மகாஸிது ஷரீஆ” முக்கியத்துவம் பெறுகிறது. ஏனெனில் மகாஸித் ஷரீஆ அடையாளப்படுத்தும் இஸ்லாத்தின் உயர் இலக்குகளோடு ஏனைய சமூகங்களும் உடன்படுகின்றன. அவர்கள் பின்பற்றும் மதங்களும், கோட்பாடுகளும், சித்தாந்தங்களும் அதனை ஏற்கின்றன. இதனால் கூட்டாக “பண்பாட்டுப் பிரச்சினையை” எதிர்கொள்வதற்கான பொதுத் தளமாக (Common Platform) மகாஸிது ஷரீஆவைக் கருத முடியும் என்கிறார் கலாநிதி ஜாஸிர் அவ்தா.

மூன்றாவதாக, “சிதைவூற்ற அரசு” என்ற அதல பாதாளத்திலிருந்து மற்றொரு முன்னேற்றகரமான தளத்திற்கு அரபுலகை நகர்த்தும் இஸ்லாமிய அறிஞர்களது கலந்துரையாடல்கள் “சிவில் தேசம்” “இஸ்லாமிய மூலம்” மற்றும் “அரசியல் பன்மைத்துவம்” போன்ற மூன்று கருத்தியல்களைச் சூழவே அமையப்பெற்றுள்ளன. இக்குறித்த கருத்தியல்கள் தொடர்பாக கருத்துக்களை முன்வைக்கும் இஸ்லாமிய அறிஞர்களை இரு பிரதான அணிகளாகப் பிரிக்கலாம்.

சிலர் முழுமையாக இஸ்லாமிய வரலாற்றிலிருந்து ஆதாரங்களை மற்றும் முன்மாதிரிகளை எடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை வலியுறுத்துபவர்கள். அடுத்த சாரார் மேற்கத்தேய அரசியல் அனுபவங்களின் நிழலிலேயே நவீன இஸ்லாமிய அரசியல் சிந்தனை குறித்து சிந்திக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைக்கின்றனார். இவ்விரண்டு சாராரையும் உடன்பாடான கருத்தாடல்” ஒன்றில் இணைத்து விடுவதற்கும் கலந்துரையாடலை மேலும் அபிவிருத்தி செய்வதற்கும் மகாஸிது ஷரீஆ இன்றியமையாதது. இக்கருத்தை கீழ்வருமாறு புத்தகத்தின் முன்னுரையில் கலாநிதி அவ்தா முன்வைக்கிறார்:

“பல நூற்றாண்டு காலமாக மனித சமூகம் பிரசவித்த சாதனைகளை புறக்கணிக்கும் மரபுவழி இஸ்லாமிய சிந்தனை முகாம்களையும், மேற்குலகின் நாகரீக அடைவுகளை அற்புதமாக நோக்கும் சிந்தனை முகாம்களையும் ஒரே இலக்கில் ஒன்றிணைக்கும் சக்தி “மகாஸிது ஷரீஆ”வுக்கு இருக்கிறது. ஏனெனில் இக்கலை ஏககாலத்தில் இஸ்லாமிய சிந்தனையை மற்றும் இஸ்லாமிய மூலங்களைத் தழுவியது. மறுபுறம், மனித நாகரீகம் பிரசவித்த சாதனைகளை இஸ்லாமிய சிந்தனைப் பின்புலத்தில் நோக்குவதற்கு துணை செய்கிறது. இந்த வகையில் பழமைக்கும், புதுமைக்கும் மத்தியில் நடுநிலை பேணும் துறை “மகாஸிது ஷரீஆ” மட்டுமே”.

அதாவது, குறிப்பாக அரபுலகமும், பொதுவாக சர்வதேசமும் எதிர்கொள்ளும் அனைத்துத் துறை சார்ந்த பண்பாட்டு பிரச்சினைக்கான தீர்வுகளையும் மகாஸிது ஷரீஆவின் மூலமே நிறைவாக முன்வைக்கப்பட முடியும். அதனை விட அரசியல் சார்ந்த மையப் பிரச்சினைகளான சிதைவடைந்த அரசுக் கட்டமைப்பு மற்றும் பலவீனமான தனிமனிதர்கள் என்ற இரு பண்பாட்டுப் பிரச்சினைகளுக்குமான தீர்வுத் திட்டத்தில் நிச்சயம் பண்பாடுகளின் தொகுப்பான மகாஸிது ஷரீஆவை முற்படுத்துவது இன்றியாததாக மாறுகிறது எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

சிவில் தேசம்”மும் மகாஸித் சிந்தனையூம்

 

எவ்வாறு சிவில் தேசம் என்ற எண்ணக் கருவை இஸ்லாமிய சிந்தனைப் பின்னணியில் புரிந்து கொள்வது? என்ற சிக்கலான விடயத்தை “சிவில் தேசம் – இஸ்லாமிய ஷரீஆவின் இலக்குகளின் நிழலில் ஓர் புரிதல்” என்ற நூலின் முதல் பாகம் விவரமாக அலசுகிறது. குறித்த கருத்தியலை அரசியல் தளத்தில் பிரயோகிக்கும் போது தோன்றும் பிரச்சினைகளை அணுக வேண்டிய முறைமையையும் புத்தக ஆசிரியர் தொட்டுக்காட்டுகிறார்.

அந்த வகையில் “சிவில் தேசம்” சொல்லிற்குரிய பரிபாசைக் கருத்தை ஒவ்வொரு சிந்தனை முகாமைச் சார்ந்தவர்களும் வித்தியாசமான நோக்கில் முன்வைத்ததுள்ளனர். உதாரணமாக லிபரல் சிந்தனைப் போக்கை கொண்டவர்கள் “தனிமனித சுதந்திரத்தை உத்தரவாதப்படுத்தும் அரசே முன்மாதிரி சிவில் அரசு” என வரையறை செய்கின்றனர். மறுபுறம் மதச்சார்பற்ற சிந்தனையை பின்பற்றுபவர்கள் “மதத்தை அரச கட்டமைப்பை விட்டும் விடுவித்து அதனை சுதந்திரமாக இயங்கச் செய்யும் அரசே சிவில் அரசு” எனக் கூறுகின்றனர். சில சட்டத்துறை நிபுணர்கள் “நாட்டின் வாழும் சகல பிரஜைகளையும் சட்டத்திற்கு முன் சமனாக மதிக்கும் அரசே சிவில் அரசு” என அடையாளப்படுத்துகின்றனர். அதற்குமப்பால், ஜனநாயகப் போராளிகள் “அரச கட்டமைப்பில் இராணுவத்தின் தலையீட்டை கட்டுப்படுத்தும் அரசே சிவில் அரசு” என விவாதிக்கின்றனார். கடைசித் தரப்பாக இஸ்லாமிய அரசியல் சிந்தனை பேசும் முகாம்களும் “சிவில் அரசு” பற்றிய தங்களது பார்வையை தெளிவுபடுத்தியுள்ளனர். அவர்கள் “அரச கட்டமைப்பில் மதகுருக்களின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதுடன், முழுமையாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஆட்சியாளார்களால் வழிநடாத்தப்படும் அரசே சிவில் அரசாகும்” என வரைவிலக்கணம் தருகின்றனர்.

இவ்வாறு பல்வேறு கோணங்களிலான வரைவிலக்கணங்களையும் சுருக்கித் தொகுத்து நோக்கும் பட்சத்தில் “சிவில் தேசம்” என்ற கருத்தியலை வடிவமைப்பதில் லிபரல்வாதிகள், மதச்சார்பற்றவாதிகள், இஸ்லாமியவாதிகள், தேசியவாதிகள் மற்றும் ஜனநாயகவாதிகள் என பல்வேறு முகாம்களைச் சேர்ந்தவர்களுக்கும் பங்களிப்புச் செய்ய முடியும் என ஜாஸிர் அவ்தா எழுதுகிறார். ஏனெனில் “முன்மாதிரி சிவில் தேசம்” என்ற கருத்தியலை மெருகூட்டுவதற்கான விழுமியமொன்றை சகல சிந்தனை முகாமினரும் தமது சிந்தனை தளங்களிருந்து சேர்த்து விடுகின்றனர். இத்தகைய பெரும்பாலான விழுமியங்களை அரச கட்டமைப்பில் உள்வாங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் மகாஸிது ஷரீவூம் உடன்படுவதாக கலாநிதி ஜாஸிர் அவ்தா குறிப்பிடுகிறார். எனவே, இவ்வனைத்து கருத்துக்களையும் ஒன்றிணைத்த வகையில் “சிவில் தேசம்” எண்ணக்கருவை அவர் இவ்வாறு வரைவிலக்கணப்படுத்துகிறார் :

இராணுவச் சார்வதிகாரங்களின் தலையீடுகள் இல்லாததும், நீதியையும், சமத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டு சகல பிரஜைகளையும் நடாத்தக் கூடியதும், சிவில் சமூகத்தின் உயிரோட்டத்தை தீர்மானிக்கக்கூடிய நிறுவனங்களை பாதுகாத்த நிலையிலும், ஒரு சமூகம் அடைய வேண்டிய உயர் மனித நலன்கள் மற்றும் பண்பாடுகளை உத்தரவாதப்படுத்தும் அரசே “சிவில் அரசாகும்.”

இக்குறித்த வரைவிலக்கணம் லிபரல்வாதிகள், இஸ்லாமியவாதிகள், ஜனநாயவாதிகள் மற்றும் தேசியவாதிகள் என அனைத்து சாராரையும் உள்ளடக்கியதாகவும், இஸ்லாமிய ஷரீஆவின் உயர் இலக்குகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளதாக அவர் வாதிக்கிறார்.

அடுத்து “சிவில் தேசம்” எண்ணக்கருவுடன் தொடர்புபட்டு எழக் கூடிய சிந்தனைச் சிக்கலொன்றையும் அடையாளப்படுத்திக் காட்டுகிறார் கலாநிதி ஜாஸிர் அவ்தா. அதாவது, எந்த சிந்தனை முகாமிற்கும் “சிவில் தேசம் எண்ணக்கரு” சொந்தமானதல்ல. யாருக்கும் “சிவில் தேசம்” என்ற வரைவிலக்கணத்தில் தனியுரிமை இல்லை. உதாரணமாக “இஸ்லாமிய சிவில் அரசு”, “கம்யூனிஸ சிவில் அரசு”, “மதச்சார்பற்ற சிவில் அரசு” அல்லது “லிபரல் சிவில் அரசு” எனக் கூறமுடியாது. ஏனெனில் குறித்த “அரசு” யாருக்கும் சொந்தமானதல்ல. ஏனெனில் அது அனைவரையும் ஒன்றிணைக்கும் “கூட்டு விழுமியங்களின்” (Collection of Shared Values) தொகுப்பாகும். இங்கு அனைவரும் உடன்படும் விழுமியங்கள் மற்றும் அடிப்படைகள் யாவை? முரண்படும் கிளைப் பிரச்சினைகள் யாவை? என்ற விடயத்தில் கூர்மையான அவதானத்துடன் ஒவ்வொரு முகாமினரும் நடந்து கொள்வது அவசியமாகும்.

ஆனால், ஒவ்வொரு கட்சிகளினதும், இயக்கங்களினதும், முகாம்களினதும் செயற்திட்டங்களுக்கு “இஸ்லாமிய” “கம்யூனிஸ” “லிபரலிஸ” அல்லது “மதச்சார்பற்றவாத” என பெயர் வைத்துக் கொள்ள முடியும். ஏனெனில், அக்கட்சிகள், இயக்கங்கள், மற்றும் முகாம்களினது உரிமைப் பொருளே அதனது செயற்திட்டங்களாகும். ஆனால் சிவில் தேசத்தின் அரச பொறிமுறைக்கு அத்தகைய அடைமொழிகளை இணைத்து விடும் உரிமை எந்த சிந்தனை முகாமினருக்கும் இல்லை. அதேவேளை, ஒவ்வொரு சிந்தனை முகாம்களும் அரச கட்டமைப்பைப் பயன்படுத்தி மக்களாதரவுடன் தமது செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்திக் கொள்ள முடியும். இன்னும், நாட்டின் மிக முக்கியமான பிரச்சினைகளின் போது தமது சிந்தனை தளத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்வுகளை முன்வைக்கும் சுதந்திரத்தையும் ஒவ்வொரு முகாமினருக்கும் சிவில் தேசம் எண்ணக்கரு வழங்குகிறது என்கிறார் கலாநிதி ஜாஸிர் அவ்தா.

 

பெரும்பான்மை முஸ்லிம் சமூகங்களும், சிவில் தேசமும்

 

முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் “இஸ்லாமிய ஷரீஆவின் அனைத்து சட்டங்களும், கோட்பாடுகளும் நிலைநாட்டப்பட வேண்டும்” என்ற சுலோகத்தை முன்வைத்து பல இஸ்லாமிய இயக்கங்களும், கட்சிகளும் செயற்பட்டு வருகின்றன. நாட்டின் சட்டயாப்பில் “இஸ்லாமிய ஷரீஆவை சட்டமியற்றும் மூலதாரமாக கொள்ளவேண்டும்” என்ற வசனத்தை தெளிவாக எழுதப்பட வேண்டும் எனவும் இவர்கள் வாதிக்கின்றனர். ஆழமாக நோக்கும் பட்சத்தில், “இஸ்லாமிய ஷரீஆவினை நிலைநாட்டல்” என்ற வசனத்தை சட்டயாப்பில் எழுத வேண்டும் என்ற வாதங்களும் கூட “சிவில் தேசம்” என்ற கோட்பாட்டிற்கு முரணானது எனலாம். மறுபுறம் “சிவில் தேசம் மற்றும் இஸ்லாமிய ஷரீஆவை நிலைநாட்டல் என்பன முரணான இரு அம்சங்களல்ல” எனவும் அவர் வாதிக்கிறார்.

ஏனெனில், இஸ்லாமிய ஷரீஆவின் உள்ளடக்கம் மூன்று பகுதிகளைக் கொண்டது.

முதலாவது, இபாதத், ஹலால் ஹராம் சட்டதிட்டங்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவை தனிமனிதர்களின் மதச் சுதந்திரத்துடன் தொடர்புபட்டவை. இது பற்றிய விழிப்புணர்வை முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் ஏற்படுத்துவதற்கு சட்டயாப்பில் “இஸ்லாமிய ஷரீஆவை நிலைநாட்டல்” எனக் குறிப்பிடத் தேவையில்லை. மாறாக, ஒரு நாட்டின் சட்டயாப்பு “மதச்சுதந்திரத்தை” உத்தரவாதப்படுத்துவதே போதுமானது. இன்னும், ஒரு முன்மாதிரி சிவில் தேசத்தின் அடிப்படைப் பண்புகளில் “மதச்சுதந்திரம் பாதுகாக்கப்படல்” என்ற விடயம் இன்றியமையாததாகும்.

இரண்டாவது, சமூக வாழ்வை நிருவகிப்பதற்கான கொள்கைகள் (Public Policy) மற்றும் சட்டங்களைப் பொருத்தவரை, அவற்றை ஆய்வுக்கும், அறிவுக்கும், அனுபவத்திற்கும் இஸ்லாம் விட்டுள்ளது. தனிமனிதர்களும், சமூகமும் அடைய வேண்டிய உயர் நலன்களை, நோக்கங்களை மற்றும் விழுமியங்களை மையப்படுத்தி அவை வடிவமைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டையே இஸ்லாம் வலியுறுத்துகிறது. இக்கருத்துடன் தேசத்தில் வாழும் சகல சிந்தனை முகாம்களும் உடன்படுகின்றன. இந்த வகையிலும், இஸ்லாமிய ஷரீஆவை சட்டமூலாதாரமாகக் கொள்ள வேண்டும் என்ற அம்சம் சிவில் தேசம் கட்டமைப்புடன் முரண்படுவதில்லை.

மூன்றாவது, இஸ்லாமிய ஷரீஆவின் சில பகுதிகளை செயற்படுத்துவதற்கு அரச பொறிமுறை அத்தியவசியமானதாகும். உண்மையில் இக்குறித்த பகுதியையும் மூன்று பிரிவுகளாக பிரித்து நோக்க முடியும்.

 

முஸ்லிம் தனியார் சட்டம்

இப்பகுதியை செயற்படுத்துவதற்கு சகல பெரும்பான்மை நாடுகளும் தனித்தனியான ஏற்பாடுகளை செய்துள்ளன. முஸ்லிம் தனியார் சட்டதிட்டங்களை செயற்படுத்துவதற்கென பிரத்தியேகமான திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்கள் அரச ஆதரவூடன் இயங்குகின்றன. மேலும், முஸ்லிம் தனியார் சட்டப் பகுதியே அதிக இறுக்கமான சட்டதிட்டங்களை கொண்டவை. இன்னும், சமூகக் கட்டமைப்பின் பலத்தையும், பலவீனத்தையும் நேரடியாக தீர்மானிக்கக் கூடியவை. எனவேதான், பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை என்ற வித்தியாசமின்றி பெரும்பாலான நாடுகள் இதற்கு தனியான ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளன. அதனை விட, முஸ்லிம் தனியார் சட்டம் மாத்திரமன்றி, பௌத்தம், ஹிந்து, கிறிஸ்தவ தனியார் சட்டங்களையும் சுதந்திரமாக செயற்படுத்துவதற்கான அனுமதியை பெரும்பாலான நாடுகள் வழங்கியுள்ளன. எனவே, இங்கு “மதத் சுதந்திரம்” என்ற கோட்பாட்டின் அடிப்படையிலேயே ஒரு சிவில் அரசு குறித்த விவகாரத்தை அணுகும்.

 

குற்றவியல் பகுதி

பெரும்பாலான முஸ்லிம் நாடுகளின் குற்றவியலோடு தொடர்புபட்ட சட்டதிட்டங்கள் இஸ்லாமிய ஷரீஆவுடன் முரண்படவில்லை. கிளையம்சங்களில் முரண்பாடுகள் காணப்பட்ட போதிலும் கூட, எல்லோரும் உடன்படக் கூடிய சமூக விரோதச் செயல்களுக்கான தண்டனை இஸ்லாமிய ஷரீஆவுடன் இணங்கிச் செல்வதனை அவதானிக்க முடியும். இன்னும், இஸ்லாமிய மார்க்கத்தின் பிரதான தினங்கள், நிகழ்வுகள் என்பன அரச ஆதரவூடன் கொண்டாடப்படும் நிலை முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் காணப்படுகிறது. அதுமாத்திரமன்றி, வக்ப், ஹஜ் மற்றும் ஸகாத் போன்ற திட்டவட்டமான சட்டதிட்டங்கள் கூறப்பட்ட பகுதிகள் கூட, சுதந்திரமாக செயற்படுத்திக் கொள்வதற்கான உரிமையை எல்லா முஸ்லிம்; பெரும்பான்மை நாடுகளில் மட்டுமன்றி, பல போது முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளிலும் அரசாங்கங்கள் கொடுத்துள்ளன. எனவே, இங்கும் முன்மாதிரி சிவில் தேசம் என்ற எண்ணக்கரு இஸ்லாமிய ஷரீஆவுடன் முரண்பட மாட்டாது என்பதனை புரிந்து கொள்ள முடியும்.

 

இஸ்லாமிய ஆடைக் கட்டுப்பாடுகளை நாட்டின் சகல பிரஜைகள் மீதும் விதித்தல், சமூக வாழ்வில் ஹலால் ஹராம் வரையறைகளை நிலைநாட்டுதல். மற்றும் வட்டிச் செயற்பாடுகளை நாட்டின் நிதிக் கட்டமைப்பிலிருந்து நீக்குதல் போன்றவும் அரசின் கடப்பாடாக இஸ்லாமியவாதிகள் வாதிக்கின்றனர். இங்குதான் இஸ்லாமியவாதிகளும், ஏனைய சிந்தனை முகாம்களும் நேரடியாக முரண்பட்டுக் கொள்ளும் பிரதான புள்ளியாகும். உண்மையில், இதனைக் கூட முரண்பாட்டுக்கான விவாதப் பொருளாக ஆக்கிக் கொள்ளாமல், இது தொடர்பாக சிவில் சமூகத்தை விழிப்புணர்வூட்டுவதற்காக இஸ்லாமிய இயக்கங்கள், நிறுவனங்கள் மற்றும் சங்கங்களைப் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இவ்வாறு இஸ்லாமிய ஷரீஆவின் பல்வேறு பகுதிகளை நிலைநாட்டுவதற்கும், அதனை சமூகத்திற்கு மத்தியில் கொண்டு செல்வதற்கும் மதச்சுதந்திரத்தை, நீதியை, சமத்துவத்தை மதிக்கும் முன்மாதிரி சிவில் தேசம் ஒரு போதும் தடையாக அமைய மாட்டாது என கலாநிதி ஜாஸிர் அவ்தா கூறுகிறார். எனவே இஸ்லாமிய ஷரீஆ சட்டமூலாதாரமாக கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துவதனை விடுத்து, முன்மாதிரி சிவில் தேசத்தினுடைய கூட்டுப் பெறுமானங்களை மற்றும் விழுமியங்களை உத்திரவாதப்படுத்திக் கொள்ளும் அரசியல் போராட்டமே இஸ்லாமிய ஷரீஆவின் நிழலிலும் இன்று வேண்டப்படும் அம்சமாகும்.

 

முஸ்லிம் பெரும்பான்மையாக வாழுமோர் சிவில் தேசத்தின் இஸ்லாமிய மூலத்தை (Islamic Referance ) எவ்வாறு வரையறை செய்வது?

 

அடுத்து, ஒரு சிவில் தேசத்தினுடைய அனைத்து வித உத்தியோகபூர்வ நடவடிக்கைகளுக்குமான ஆதாரங்களாக “அல்குர்ஆன், அஸ்ஸூன்னா” என்ற இரு இஸ்லாமிய அடிப்படை சட்டமூலதாரங்களும் சட்டயாப்பு உத்தரவாதப்படுத்த வேண்டும் எனவும் சிலர் வாதிக்கின்றனர். ஆனால் தேச செயற்பாடுகளின் போது அல்குர்ஆன் மற்றும் ஸூன்னாவை எவ்வாறு கையாளப்பட முடியூம் என்ற விடயம் ஆழமானது. மேம்போக்காக குறிப்பிடுவதற்கு அழகானதாக இருந்தாலும், இது ஆழமான ஆய்வை வேண்டி நிற்கும் பகுதியாகும். அப்பகுதிக்குல் பலநூற்றுக்கணக்கான கருத்து முரண்பாடுகள் காணப்படுகின்றன.

எத்தகைய வசனங்கள் அரசுடன் அல்லது அரசாங்கத்துடன் நேரடியாகத் தொடர்புபடுகின்றன? எவை தனிமனிதர்களின் சுதந்திரத்துடன் தொடர்புபடுகின்றன? போன்ற கேள்விகளும், அது தொடர்பாக இமாம்கள், அறிஞர்களுக்கு மத்தியில் காணப்படும் வாதப் பிரதிவாதங்களும் ஏராளமானவை. அதற்கும் அப்பால், அல்குர்ஆனிலிருந்து பெற்ற சட்ட வசனங்களுக்கான இமாம்களின் வித்தியாசமான நோக்குகள், வியாக்கியானங்கள் இன்னும் ஆழமானவை. மறுபுறம், எத்தகைய நபி (ஸல்) அவர்களது நடத்தைகள் தேச செயற்பாடுகளுடன் தொடர்புபடுகின்றன? எவையெவை தூய்மையான நபித்துவ செயற்பாடுகள்? அல்குர்ஆனில் பொதுமையாக வந்த ஓர் சட்டத்தை ஸூன்னா குறிப்பாக்குமா? போன்ற ஸூன்னாவின் சட்ட சிந்தனையுடன் தொடர்புபட்ட வாதப் பிரதிவாதங்கள் நீண்டு செல்கின்றன. எனவே பாரதூரம் தெரியாது வெறும் வார்த்தை ஜாலத்திற்காக “அல்குர்ஆனும், ஸூன்னாவூம் நாட்டின் அரச செயற்பாடுகளுக்கான ஆதாரங்களாக கொள்ளப்பட வேண்டும்” என சட்டயாப்பில் எழுத வேண்டும் என வாதிப்பது பொருத்தமற்றதாகும். இவையணைத்து விவாதங்களையும் ஒழுங்குபடுத்தும் வகையில் “ஒரு தேசத்தின் அரச மற்றும் சிவில் செயற்பாடுகள் இஸ்லாமிய ஷரீஆவின் இலக்குகள் ஆதாரமாகக் கொள்ளப்பட வேண்டும்” என்ற கோணத்தில் ஒரு தேசத்தினுடைய அரசியல் சிந்திப்புகள், தீர்மானங்கள் மற்றும் நடவடிக்கைகள் திசைப்படுத்தப்படுவதே உசிதமானது என அவர் மேலும் குறிப்பிடுகிறார். இது தொடர்பாக “ஒரு முஸ்லிம் பெரும்பான்மை தேசத்தினுடைய சட்டசிந்தனைக்கான மூலங்கள் (Reference) யாவை?” என்ற பகுதியில் இவ்வாறு தனது சிந்தனையை சுருக்கமாக முன்வைக்கிறார் கலாநிதி ஜாஸிர் அவ்தா :

“எத்தகைய பெறுமானங்களை பண்பாடுகளை மற்றும் இலக்குகளை மையப்படுத்தி சமூக வாழ்வுடன் தொடர்புபட்ட விவகாரங்கள் அமைய வேண்டும் என்பதனை இஸ்லாமிய ஷரீஆ விரிவாகவே அடையாளப்படுத்திக் காண்பிக்கிறது. உதாரணமாக புரிந்துணர்வு, சகவாழ்வு, பரஸ்பர பாதுகாப்பு, உயர் மனித நலன்களை அடைதல், மனித உரிமைகளுக்கான பாதுகாப்பு, நீதி நிலைநாட்டப்படல், அநியாயம் ஒழிக்கப்படல், சூழல் பாதுகாப்பு, மதச்சுதந்திரம் உத்தரவாதப்படுத்தப்படல், பொருளாதார அபிவிருக்தி, அறிவு மேம்பாடு என்பன சமூக வாழ்வுடன் தொடர்புபடுத்தி இஸ்லாமிய ஷரீஆ உணர்த்த வரும் உயர் இலக்குகளாகும். இச்சிந்தனைகள் நாட்டின் அரச விவகாரங்களை மற்றும் கொள்கைகளை வழிநடாத்தினால் போதுமானது. எனெனில் வெறுமனே அல்குர்ஆன், ஸூன்னா அல்லது இஸ்லாமிய பிக்ஹ் என்பன தேசத்தின் கொள்கை உருவாக்கதிற்கான ஆதாரமாகக் கொள்ளப்பட வேண்டும் என வாதிப்பதை விட அல்குர்ஆன் ஸூன்னா மற்றும் இஸ்லாமிய பிக்ஹின் இலக்குகள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும் என வலியூறுத்துவது மிகவும் பாரமானதும், பலமானதுமாகும், பொருத்தமானதாகும்”

அடுத்து “இஸ்லாமிய வரலாறு” ஐ நவீன கால அரசியல் சிந்தனையை மற்றும் செயற்பாடுகளை வடிவமைப்பதற்கான மூலங்களில் ஒன்றாக கருத முடியுமா? என்ற பாரிய வாதப் பிரதிவாதங்களைக் கொண்ட தலைப்பையூம் கலாநிதி அவ்தாவின் நூல் ஆய்வு செய்கிறது. அந்த வகையில் முதலாவதாக ‘வரலாற்றை ஒரு மூலதாரமாகக் கொள்ள முடியாது’ என்ற இஸ்லாமிய சட்டசிந்தனையாளர்களின் “உஸூலியூன்களின்” கருத்தை அவர் தெளிவுபடுத்துகிறார். ஏனெனில் அல்குர்ஆன், அஸ்ஸூன்னா ஆகிய இரண்டு மட்டுமே அடிப்படை இஸ்லாமிய சட்ட மூலாதாரங்களாகும். இஸ்லாமிய வரலாறென்பது குறித்த மூலதாரங்களின் பிரயோகமாகவே கருதப்பட வேண்டும். எனவே மூலாதாரத்தையூம் அதன் பிரயோகத்தன்மையையூம் வேறுபடுத்தி நோக்க வேண்டியது அவசியமாகும் என அவர் வலியுறுத்துகிறார்.

ஆனால் இஸ்லாமிய வரலாறென்பது முஸ்லிம் உம்மாவின் தனித்துவத்துடன் தொடர்புபட்ட அம்சம் என்பதனையும் மறந்து விட முடியாது. ஒரு சமூகத்தின் தனித்துவத்தை, கலாச்சாரத்தை, சிந்தனையை தீர்மானிப்பதில் அச்சமூகத்தின் வரலாற்றோட்டத்திற்கு பாரிய பங்குண்டு. இந்தப் பின்புலத்தில் முஸ்லிம் உம்மாவின் தனித்துவத்தையும், அதன் நீண்ட வரலாற்றையும் பிரித்து நோக்க முடியாது. இன்று இஸ்லாமிய வரலாற்றிலிருந்து முஸ்லிம் உம்மா பெற்றுக் கொள்ள வேண்டிய ஏராளமான விடயங்கள் இருக்கின்றன. குறிப்பாக, சிறந்த சிவில் சமூகமொன்றை உருவாக்குவதற்காகவும், அரசின் தலையீட்டிலிருந்து அதனை பாதுகாப்பதற்காகவும் முஸ்லிம் உம்மா பிரசவித்த “வக்ப் முறைமை”யைக் குறிப்பிடலாம்.

இது இஸ்லாமிய வரலாற்றிலிருந்து முஸ்லிம் உம்மா பெற வேண்டிய ஓரம்சமாகும். இத்தகைய சிவில் சமூகத்தின் தனித்துவத்தை பாதுகாப்பதற்கான ஏற்பாடு வேரெந்த நாகரீகத்திலும் இருந்தில்லை. இச்சிந்தனை சமகால முஸ்லிம் உம்மாவின் நலனோடும் தொடர்புப்படுகிறது. எனவே இஸ்லாமிய ஷரீஆவின் இலக்குகளின் பின்புலத்திலும் இஸ்லாமிய வரலாறு பிரசவித்த வக்ப் சிந்தனையை முஸ்லிம் உம்மா நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கூறலாம்.

எனவே இஸ்லாமிய வரலாற்றை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கும் போக்கும் மறுக்கப்பட வேண்டியதே என அவர் வலியுறுத்துகிறார். மறுபுறம் இஸ்லாமிய வரலாறு முழுமையாக இஸ்லாமிய அரசியலுக்கு முன்மாதிரி என வாதிப்பதும் பிழையாகும்.

மூன்றாவது, இஸ்லாமிய வரலாற்றில் சமகால அரசியல் கோட்பாடுகள் அப்படியே இருந்து வந்துள்ளன என்ற மேற்குலகிடம் நியாயம் கற்பிக்கும் போக்கும் தவிர்க்கப்பட வேண்டும். இவையனைத்திற்கும் அப்பால் சமகால முஸ்லிம் உம்மாவின் நலன்களை அடையச் செய்வதில் இஸ்லாமிய வரலாறு பிரசவித்த ஏராளமான முன்மாதிரிகள் மற்றும் முன்னுதாரங்கள் காணப்படுகின்றன. அவற்றை முஸ்லிம் உம்மா விட்டுவிடக் கூடாது. பிறநாகரீகங்களுடான உரையாடல், பிறமதங்களுடனான உரையாடல், கல்வி எழுச்சி மற்றும் சமூக சகவாழ்வு என்பன இஸ்லாமிய வரலாற்றிலிருந்து இன்றைய முஸ்லிம் உம்மா பெற்றுக் கொள்ள வேண்டிய சில அம்சங்களாகும் என்கிறார் கலாநிதி ஜாஸிர் அவ்தா.

 

சமகால அரசியல் சிந்தனைகளும், இஸ்லாத்தின் விழுமிய நோக்கும்

 

“சிவில் தேசம்” பற்றிய நூலினுடைய இறுதிப் பகுதி “இஸ்லாமிய அரசியல் சிந்தனையை வாசிப்புச் செய்யும் பல்வேறுப்ட்ட போக்குகள்” என்ற பகுதி ஓரு வித்தியாசமான விடயதானத்தை ஆய்வுக்குட்படுத்துகிறது. அதாவது, சமகால உலகில் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் கோட்பாடுகளை, சிந்தனைகளை மற்றும் முறைவழிகளை எவ்வாறு நோக்க வேண்டும்? அவற்றை அணுகுவதற்கான அடிப்படைகள் யாவை? என்பதே குறித்த ஆய்வுப் பொருளாகும்.

நவீன இஸ்லாமிய அரசியல் சிந்தனை பற்றிய கலந்துரையாடலில் பங்குபற்றும் பலரும் ஓர் அடிப்படையான தவறினை இழைப்பதாக புத்தகாசிரியர் கலாநிதி அவ்தா குறிப்பிடுகிறார். அதுவே சமகாலத்தில் காணப்படும் அரசியல் ஒழுங்குகள் முறைமைகள் அல்லது கோட்பாடுகளுக்கு ஏற்ப இஸ்லாமிய ஷரீஆவின் சிந்தனைகளை நியாயப்படுத்த முற்படுவதாகும். உதாரணமாக ஜனநாயகவாதிகளுடன் கலந்துரையாடும் போது “ஜனநாயகம் இஸ்லாத்திலும் இருக்கிறது” என வாதிப்பர். அதற்கான ஆதாரமாக “மதீனாவில் நபி (ஸல்)அவர்கள் உருவாக்கிய அரசு ஜனநாயக அரசாகும்” என கூறுவார்கள். இன்னும் ஜனநாயகம் வேண்டி நிற்கும் “பன்மைத்துவ கட்சி முறைமை”யை இஸ்லாமும் அங்கீகரிக்கிறது. இஸ்லாமிய வரலாற்றில் காணப்பட்ட வித்தியாசமான மத்ஹபுகள் இன்று காணப்படும் வித்தியாசமான கட்சி முறைமையின் அன்றைய வடிவமாகும்” என ஆதாரப்படுத்துவார். இன்றைய பாராளுமன்ற முறைமையை பற்றிக் கலந்துரையாடும் போது “இஸ்லாத்தின் ஷூரா” சிந்தனை அதனையே வலியூறுத்துவதாக கூறுவார்கள். மறுபுறம், நவீனகால சில ஜனநாயகவாதிகள் “ஜனாதிபதியின் அதிகாரங்கள் இல்லாமலாக்கப்பட்டு, பாராளுமன்றத்தின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்” என விவாதிக்கும் பட்சத்தில், இஸ்லாமிய சிந்தனையும் அதனையே வலியுறுத்துகிறது என பதில் கூறுவார்கள். 1990களுக்கு முற்பட்ட காலப்பிரிவில் “கம்யூனிஸம் இஸ்லாத்திலும் இருக்கிறது” என சிலர் பேசிவந்தனர். குறிப்பாக ஸகாத், ஸதகா மற்றும் ஏனைய நீதி தொடர்பான சட்டதிட்டங்கள் கம்யூனிஸ அரசை இஸ்லாம் அங்கீகரிக்கிறது என்பதற்காக ஆதாரமாக அவர்கள் முன்வைத்தனர்.

இஸ்லாமிய அரசியல் சிந்தனையை முன்வைப்பதற்காக கையாளப்படும் இத்தகைய ஒப்பீட்டாய்வுகள், அது வலியூறுத்தும் “விழுமிய நோக்கு”டன் (Value Based Perception) முரண்படுவதாக கலாநிதி அவ்தா கூறுகிறார். ஏனெனில் இதனால் இரண்டு பாரிய பின்விளைவுகள் ஏற்படுகின்றன. முதலாவது, காலமாற்றத்திற்கு ஏற்ப மாறுபடும் அரசியல் கலந்துரையாடல்களுக்கு சட்டபூர்வத்தன்மையை பெற்றுக் கொடுக்கும் கருவியாக இஸ்லாமிய சிந்தனை மாற்றப்படலாம். உலகிற்கு தேவையான சிந்தனைகளை பிரசவிப்பதற்காக இஸ்லாமிய சிந்தனை தொழிற்படுகிறதே அன்றி, யாரோ பிரசவிக்கும் கொள்கைகளுக்கு ஆதாரம் கூறும் புத்தகங்களாக இஸ்லாமிய மூலாதாரங்களை மாற்ற முடியாது என்கிறார் அவர்.

அடுத்து, சமகால அரசியல் கோட்பாடுகள், சிந்தனைகள் மற்றும் முறைமைகள் என்பன முழுமையாக இஸ்லாமிய விழுமியங்களுடன் உடன்பட்டுச் செல்கிறது என்று கூறுவதற்கும் இல்லை. எனவே, இஸ்லாம் கொண்டுள்ள உன்னத விழுமியங்களைப் பயன்படுத்தி சமகால அரசியல் கோட்பாடுகளை அபிவிருத்தி செய்தல் அல்லது அதன் ஓட்டை ஒலசல்களை நெறிப்படுத்தல் போன்ற பணிகளை முன்கொண்டு செல்ல வேண்டுமே அன்றி, நவீன சிந்தனைகளின் பின்னால் அல்லுண்டு செல்வது பொருத்தமானதல்ல என மேலும் அவர் குறிப்பிடுகிறார்.

உதாரணமாக, ஜனநாயகம் முன்வைக்கும் கட்சியரசியல் முறைமை, பாராளுமன்ற முறைமை மற்றும் நிறைவேற்றுத் துறை என்பவற்றில் ஏராளமான மாற்றங்களும் நெறிப்படுத்தல்களும் ஏற்படுத்தப்பட வேண்டிய தேவை காணப்படுகிறது. மறுபுறம் இதனை செயற்படுத்துவதில் சர்வதேச சக்திகளின் தலையீடுகள் விரிவாக அலசப்பட வேண்டிய மற்றொரு பகுதியாகும். இவையனைத்தையும் ஒரு புறம் தள்ளிவிட்டு ஜனநாயகம், கம்யூனிஸம் அல்லது ஏனைய அரசியல் சித்தாந்தங்கள் இஸ்லாத்துடன் முழுமையாக உடன்பட்டுச் செல்கின்றன என்ற திட்டவட்டமான முடிவை வலியூறுத்தும் போது, இஸ்லாம் போதிக்கும் அரசியல் விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட நாளைய இஹ்திஹாத்கள் தடைப்படுகின்றன. இவ்வாறு “ எமக்குத் தேவையான எல்லா அம்சங்களும் இன்னொருவரிடம் இருக்கிறது என்ற சிந்தனைப் போக்கினாலேயே ‘இஹ்திஹாத்களின் வீழ்ச்சி காலப்பிரிவை’ இஸ்லாமிய வரலாறு சந்திக்க வேண்டியேற்பட்டது” என அவர் மேலும் வலியூறுத்துகிறார்.

மிக முக்கியமானதோர் கருப்பொருளை நோக்கி நவீன இஸ்லாமிய சிந்தனை பற்றிய கலந்துரையாடல்களை திசைப்படுத்த முயற்சிக்கிறார். கலாநிதி ஜாஸிர் அவ்தா. அதாவது, உலகில் எத்தகைய அரசியல் சிந்தனைகள், கோட்பாடுகள் அல்லது தத்துவங்கள், முறைவழிகள் தோன்றினாலும் கூட, அவற்றை இஸ்லாமிய ஷரீஆ உணர்த்தும் விழுமியங்கள், இலக்குகள் மற்றும் பண்பாடுகளை அளவுகோலாக முன்னிறுத்தியே விவாதிக்க வேண்டும். அவ்வாறில்லாமல் பல கருத்துகளுக்கு இடம்பாடான தனித் தனி அல்குர்ஆன், ஸூன்னாவின் சட்ட வசனங்களை மற்றும் இஸ்லாமிய வரலாற்று நிகழ்வுகளை சமகால அரசியல் முறைமைகளோடு ஒப்பிட்டு வலிந்து நியாயம் கற்பிக்க முயற்சி செய்தல் அல்லது பிழையான ஒப்பீடுகளுக்கு ஊடாக நவீன அரசியல் முறைமைகளை ஏற்றுக் கொள்ளச் செய்தல் போன்றவற்றை தவிர்ந்து கொள்ள வேண்டும் என்பதாகும். இக்கருத்தை மேலும் பலப்படுத்துவதற்காக பிரபல இஸ்லாமிய சிந்தனையாளர் பேராசிரியர் அப்துல் ஹமீத் அபூஸூலைமான் அவர்களுடைய கீழ் வரும் கருத்தையும் ஆதாரமாக அவர் முன்வைக்கிறார் :

“இஸ்லாமிய ஷரீஆவின் இலக்குகள், நோக்கங்களின் ஒளியில் சமகால அரசியல் ஒழுங்குகளை பரீட்சித்துப் பார்த்த பின்னரே, அதனை உள்வாங்க வேண்டும். எந்த முறைமையையும் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்வதனை இஸ்லாமிய சிந்தனை முழுமையாக மறுக்கிறது. இவ்விடயத்தில் முஸ்லிம் உம்மா மிகவும் நுணுக்கமாகவும், கவனமாகவும், நிதானமாகவும் நடந்து கொள்ள வேண்டும். அடுத்த நாகரீகங்களிடமிருந்து ஒரு விடயத்தை எப்படிப் பெற்றுக் கொள்வது என்பது தொடர்பான இஸ்லாமிய சிந்தனையின் அடிப்படைகளை புரிந்து கொண்ட நிலையில், குறித்த நவீன அரசியல் ஒழுங்குகளை முஸ்லிம் உம்மா உள்வாங்கிக் கொள்ள வேண்டும்”. (12)

இறுதியாக, பன்மைத்துவ அரசியல் சிந்தனையை விதைக்க முயலும் பல கட்சி முறைமை, நல்லாட்சி, தேர்தல்கள், பாராளுமன்றம், சட்டயாப்பு உருவாக்கம், மற்றும் வலுவேறாக்கம் போன்ற அரசியல் கோட்பாடுகளையும், இஸ்லாமிய கட்சி, இஸ்லாமிய ஆட்சி, இஸ்லாமிய தேசம் போன்ற மங்களான கருத்தைக் கொடுக்கக் கூடிய சொற்களின் உட்பொருள்களையும் நிலையான இஸ்லாமிய அரசியல் விழுமியங்களின் ஒளியில் அலசப்பட வேண்டும் என ஜாஸிர் அவ்தா அழைப்பு விடுக்கிறார்.

இத்தகைய அழைப்பை ஜமாலுத்தீன் ஆப்கானி, அல்லமா இக்பால், முஹமத் அப்துஹூ மற்றும் ரசீத் ரிழா போன்ற “சீர்திருத்த சிந்தனைப் பள்ளியின் ஆரம்ப கர்த்தாக்களே” விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார். அந்த வகையில் கீழ்வரும் இலக்குகளை மற்றும் நோக்கங்களை நவீன இஸ்லாமிய அரசியல் சிந்தனை குறித்த விவாதங்களில் பேசுபொருளாக ஆக்கிக் கொள்ளலாம் என்ற முன்மொழிவையும் விலாவாரியாக அலசுகிறார் கலாநிதி அவ்தா. அவையாவன, “நிலையான பொருளாதார அபிவிருத்தியை வேண்டி நிற்கும் அரசியல் ஸ்தீரப்பாட்டை எய்துதல்” இ“சர்வதிகாரதிற்கு வித்திடும் அதிகாரச் சுழற்சியை ஏற்படுத்தல்”, “சமூக வாழ்வின் பொதுவான நலன்களை அடைதல்”, “அரசியல் உரிமைகளை பெற்றுக் கொடுத்தல் மற்றும் உத்தரவாதப்படுத்தல்”, “உள்ளம் பயிற்றுவிக்கப்பட்ட தூய்மையான அரசியல்வாதிகளை உருவாக்குதல்”, “பிரஜாவுரிமைக் கோட்பாட்டை நிலைநாட்டல்”, “சிறுபான்மையுடைய உரிமைகளை பாதுகாத்தலும்”, “நாட்டின் ஒரு நிறுவனத்தின் கைகளில் அதிகாரம் குவிவதை கட்டுப்படுத்தல்” என்பனவாகும்.

 

 

http://www.alwasath.com/civilthesam/